ஜி.எஸ்.டி. அமலான பிறகு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் புரோஹித், கஜா புயலுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நியாயமான நிதிப்பகிர்விற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், GST வரியில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 2 ஆயிரம்  கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை வழங்காததால் மாநிலத்தில் நிதி நிலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது எனவும் அந்த தொகையை மத்திய அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.  மேலும், ஆயிரத்து 652 கோடி ரூபாயில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவது உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறும் செயல் என்றும் மத்திய நீர்வளத்துறை மேகதாது அணை ஆய்வுக்கு உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் ஆளுநர் பன்வாரி ஆளுநர் புரோஹித் கூறினார். மேலும், முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக கேரளா புதிய அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து தமிழகம் எதிர்க்கும் என்றும், சட்ட முன்வடிவுகள் பலவற்றில் தமிழக அரசின் கருத்துக்களை மத்திய அரசு ஏற்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம் மூட வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும் என்றும்,  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், உதகை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் தமது உரையில் குறிப்பிட்டார்.