சாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

416

வாணியம்பாடியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தலைவில் உள்ள நெக்னாமலை என்னும் மலைகிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால், அடிப்படை தேவைகளுக்கு கூட மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் இப்பகுதி மக்கள் நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து பல முறை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பிழைப்புக்காக கோவை சிங்காநல்லூரில் வசித்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த முனிசாமிக்கு 7 மாத கர்ப்பிணி மனைவி உள்ள நிலையில் அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய இறந்தவரின் உடல் நெக்னாமலைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சாலை வசதி இல்லாததால், அவரது உடலையும், அவரது 7 மாத கர்ப்பிணி மனைவியையும் அப்பகுதி மக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்ற காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement