”பீர் தொப்பை” குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

1422

பீர் குடிப்பதால் ஆண்களுக்கு தொப்பை வருகிறதா? “பீர் தொப்பையால்” ஆண்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? பீர் தொப்பை குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பீர் குடிப்பது தங்கள் உடலுக்கு தீங்கு என்பதை நினைத்து வருந்துவர்களை விட, பீர் குடிப்பதால் வரும் தொப்பையைப் பார்த்து கவலைப்படும் குடிமகன்கள் தான் நம் ஊரில் அதிகம். பல ஆண்களின் தினசரி கவலையாக இருக்கும் இந்த பீர் பெல்லி ஏற்படுவதற்கான மிகமுக்கிய காரணத்தை கண்டறிந்துள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

வைன், விஸ்கி, மற்றும் பீர் மூன்றும் எந்தளவுக்கு குடித்தால் சராசரி நபருக்கு ஒரே அளவு போதை ஏறுமோ அந்தளவிற்கு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி ஒரு டின் பீர் ஐந்து பெக் வைனுக்கும் ஒரு ஷாட் விஸ்கிக்கும் சமம். குடிக்காதவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமெனால் 300ml பீர் 150 ml வைனுக்கும் 45 ml விஸ்கிக்கும் சமம்.

ஒரு டின் பீரில் சுமார் 150 கலோரிகள் இருக்கின்றன. இது, 5 பெக் வைனை விட 50 கலோரிகள் அதிகம். 1 ஷாட் விஸ்கியை விட 45 கலோரிகள் அதிகம். பீர்-ல் உள்ள இந்த கலோரிகள் Visceral fat என்று சொல்லப்படும் கொழுப்பாக மாறி உடலில் படிகிறது.

அதுவும் ஆண்களுக்கு குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இரைப்பை, கல்லீரல், குடல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் படியும் இந்த கொழுப்புகள் இன்சுலின் சுரப்பு போன்ற உடலின் வழக்கமான பணிகளை பாதிக்கின்றது. இதுவே, நீரிழிவு, இதயக் கோளாறுகள், கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதோடு நின்றுவிடவில்லை ஆராய்ச்சி முடிவுகள். ‘பீர் பெல்லி’ வைத்திருக்கும் ஒரு ஆணுக்கு 87 % மரண ஆபத்து இருப்பதாகச் சொல்லி பீர் பிரியர்களின் தலையில் இடியையே இறக்கியதோடு, ஆண் தன்மை குறைப்பாட்டையும் உண்டாக்கும் என்று சொல்லி பீர் பிரியர்களை ஐயையோ போட வைத்திருக்கிறது இந்த ஆய்வு.

வைன் விஸ்கியைவிட பீரில் ஆபத்துக் குறைவு என்றுதான் பலரும் பீரை தேர்ந்தெடுகிறார்கள். ஆனால் பீர் குடித்தாலும் அவற்றுக்கு நிகரான ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. மொத்தத்தில் குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும்.

Advertisement