தனியாரிடம் செல்லும் பாரத் பெட்ரோலியம்..- மேலும் 4 நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..!

1131

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இழுத்துமூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அரசு நிறுவனங்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்து நாட்டின் வருவாய் குறைந்துள்ளதால், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ., நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளையும், கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 54.80 சதவீத பங்குகளில், 30.9 சதவீத பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.