8 பேரும் என்ன பண்ணுணாங்க தெரியுமா? – வெளுத்து வாங்கிய மதுமிதா

1074

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு விதிகளை மீறியதாக அந்நிகழ்ச்சியை விட்டு நிகழ்ச்சி அமைப்பினரால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா.

அவர் வீட்டுக்குள் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என்றெல்லாம் பரபரப்பான புகார்கள் வெளிவந்தன. பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில விளக்கம் கொடுத்தார். ஆனால் பிரச்சினை நடந்த அன்று வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி அவர் அன்று சொல்லவில்லை..

இன்று(செப்.9) விஜய் டிவி ஏற்பாட்டின்படி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

“பிரச்சினை நடந்த அன்று ஒவ்வொருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்களது தனித் திறமையை வெளிப்படுத்த சொன்னார்கள். சுதந்திர தினத்தன்று அது நடந்தது. அன்று ஒரே வரி கவிதை சொன்னேன். நம் ஊரில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டுவேன்.

அந்த டாஸ்க்கில் வருண பகவானும் கர்நாடகாவைச் சேர்ந்தவரோ, மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறாரோ’ என்று கவிதை சொன்னேன். நான் அப்படி கவிதை சொன்னதற்கு சேரன், கஸ்தூரி ஆகியோரைத் தவிர மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நமக்கு தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக நான் தினமும் கடவுளிடம் வேண்டுவேன். ஸ்லோகம் சொல்வேன். மழை வர வேண்டும் என்று வேண்டுவேன். அதைத்தான் கவிதை வடிவில் சொன்னேன்.

அது பற்றி பிக்பாஸ் பின்னர் ஒரு கடிதம் அனுப்பினார். வீட்டுக்குள் அரசியல் பேசக் கூடாது என்றார். நான் மழை வேண்டி கவிதை சொன்னதில் எங்கே அரசியல் இருக்கிறது. அப்படி ஒரு கடிதம் வந்ததும் சேரன், கஸ்தூரி தவிர மற்றவர்களின் ‘கொடுமை’ இன்னும் அதிகமானது.

என்னை அவ்வளவு கிண்டலாக, கேலியாக பேசினார்கள். ஒரு ‘கேங் ராங்கிங்’ போல அது இருந்தது. அது தாங்க முடியாததால்தான் கையை அறுத்துக் கொண்டேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் கூட நான் தண்ணீர் பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது.

அந்த 8 பேரையும் மக்கள் வெற்றி பெற வைக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கமல்ஹாசன் அவர்களும் அது குறித்து எதுவுமே கேட்காதது வருத்தமாக இருந்தது. அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதைப் பற்றி அவர் பேசியிருக்க வேண்டும்,” என்றார்

Advertisement