“படம் பார்த்தே ஆகவேண்டும் என்பவர்கள்தான் டார்கெட்..” டிக்கெட் அச்சடித்து வினியோகித்த 4 பேருக்கு நேர்ந்த சம்பவம்..!

727

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில், நடிகர் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. தூத்துக்குடியில் பிகில் திரைப்படம் இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

இதில், கிளியோபாட்ரா தியேட்டரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்களின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதற்கான முழுக் கட்டணமும் மன்றம் சார்பில் செலுத்தப்பட்டு, மன்றத்தின்மூலம் ரசிகர்களுக்கான பெரிய அளவிலான டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த டோக்கன்களைப் பெற்ற ரசிகர்கள், நேற்று காலை சிறப்புக் காட்சியில் ‘பிகில்’ திரைப்படம் பார்ப்பதற்காக தியேட்டரில் குவிந்தனர். தியேட்டரில் இருக்கைகள் நிரம்பி, இரு ஓரங்களில் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தபோதிலும், தியேட்டருக்கு வெளியில் கையில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு ரசிகர்கள் பலர் நின்றுகொண்டிருந்தனர்.

மன்றத்தின் சார்பில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட, ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மன்றத்தினர், டிக்கெட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, அதில் பல டிக்கெட்டுகளில் முன்பக்க அச்சு, பின்புறமும் பதிந்தும் தாளின் தன்மை இலகுவாகவும் இருந்துள்ளது.

இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர், தென்பாகம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன்பாபு, ஆனந்த்ராஜ் மற்றும் அச்சடித்துக் கொடுத்த நெல்லையைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் உமர் ஃபரூக், உதவியாளர் செல்வின் முத்துராஜ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி பிரகாஷ் பேசுகையில், ” பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு குறிப்பிட்ட திரையரங்கில் விநியோகிக்கப்பட்டிருந்த 800 டிக்கெட்டுகளுக்குப் பதிலாக 1000-த்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

போலி டிக்கெட்டுகள்
இதுதொடர்பாக மன்றத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தியேட்டர் ஊழியர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளின் உதவியுடன் சோதனை நடத்தினோம். இதில், பலரின் கையில் இருந்தது டூப்ளிகேட் டிக்கெட்டுகள் எனத் தெரியவந்தது.

டூப்ளிகேட் டிக்கெட் வைத்திருந்த சில ரசிகர்களை மடக்கி, “டிக்கெட் எப்படிக் கிடைத்தது?” என விசாரத்தோம். அவர்கள், டிக்கெட் வாங்கிய சில நபர்களைச் சொன்னார்கள். அந்த நபர்களைத் தொடர்பு கொண்டோம்.

இதுதொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன்பாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அதில், நெல்லையில் உள்ள ஒரு அச்சகத்தில் 300 போலி டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன்பாபு, ஆனந்த்ராஜ், நெல்லை அச்சக உரிமையாளர் உமர் ஃபரூக், உதவியாளர் செல்வின் முத்துராஜ் ஆகிய 4 பேரைக் கைதுசெய்துள்ளோம்.

மோகன்பாபுவிடமிருந்து ரூ.27 ஆயிரம் பணம், 14 போலி டிக்கெட்டுகள், போலி டிக்கெட் அச்சடிக்கப் பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரின்டர் மற்றும் 6 ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனந்த்ராஜ், மோகன்பாபு ஆகியோர் ஏற்கெனவே இதுபோல் பலமுறை போலி டிக்கெட் அச்சடித்துக் கொடுத்துள்ளனர்” என்றார். நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், ” தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் எப்போதெல்லாம் ரிலீஸாகுதோ, அப்போவெல்லாம் நாங்க டூப்ளிக்கெட் டிக்கெட் அச்சடிச்சிடுவோம்.

ரசிகர் மன்றத்தினர் எந்த ஊர்ல டிக்கெட் பிரின்ட் செய்தாலும், அதுல ஒரே ஒரு டிக்கெட்டை மட்டும் வாங்குவோம். அதே மாதிரி அச்சுப் பிசகாம பிரின்ட் அடிச்சிடுவோம்.

படம் ரிலீஸுக்கு ரெண்டு நாள் முன்னாலதான் டிக்கெட்டுக்கு டிமாண்ட் அதிகமாகும். அந்த நேரத்துலதான் எங்களுக்கு உதவக்கூடிய சில டிக்கெட் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்திடுவோம். ரசிகர் ஷோவுக்கு மட்டும்தான் டூப்ளிக்கேட் டிக்கெட் அடிப்போம்.

ஒரு ரசிகர் ஷோவில் டூப்ளிகேட் டிக்கெட் விற்பனை மூலமா ரூ.50 ஆயிரம் வரை வருமானம் பார்த்திடுவோம். ‘படம் பார்த்தே ஆக வேண்டும்’ என்ற தீவிர ரசிகர்கள்தான் எங்க டார்கெட்.

அப்படிப்பட்டவர்களிடம் டபுள் ரேட் சொன்னாக்கூட வாங்கிடுவாங்க” என விசாரணையில் சொல்லி போலீஸாரையே அதிரவைத்துள்ளனர். பிகில் திரைப்பட சிறப்புக்காட்சிக்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of