காலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..!

1383

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ஒரே ஒரு புலம்பெயர் தொழிலாளி, காலையில் 40 சப்பாத்தியும், மத்தியத்துக்கு 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட் நிலைடியில், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், அந்தந்த மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாள்கள் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை மாநில அரசுகளே அளித்து வருகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் மட்டும் விநோதமாக ஒரு விஷயம் நடப்பதை அதிகாரிகள் கவனித்து வந்தனர்.

அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை விட, 10 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு உணவு அதிகமாகத் தேவைப்பட்டது. இது பற்றி ஆராய நேரில் ஒருநாள் சென்ற போது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திரும்பிய 23 வயது புலம்பெயர் தொழிலாளி, மஞ்ச்வாரி தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இவர் காலை உணவாக 40 சப்பாத்திகளையும், மதிய உணவுக்கு 10 தட்டு சாப்பாட்டையும் உண்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் மதிய நேரத்தில் நேரடியாக மையத்துக்குச் சென்றனர். அப்போதுதான், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த அனுப் ஓஜா என்ற இளைஞன், 10 தட்டு சாப்பாட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். சுமார் 10 பேர் சாப்பிட வேண்டிய உணவை ஒரே நபர் உண்டு முடித்தார்.

அவர் ஏற்கனவே 10 நாள்கள் அந்த மையத்தில் தங்கியிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் அவரது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைய உள்ளது. எனவே, அவருக்குத் தேவையான உணவை வழங்குமாறும், அவரது உணவை எந்த வகையிலும் குறைக்க வேண்டாம் என்றும், அங்கு உணவு வழங்கும் பணியில் இருந்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டுத் திரும்பினர்.

ஓஜா என்ற ஒரே ஒரு இளைஞரால், இந்த தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பப்படும் உணவின் அளவு மட்டும் பல அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளிகள் உணவின்றி உயிரிழக்கும் நிகழ்வை காணமுடிகிறது. இந்த நிலையில் பசியின் கோரப்பிடியில் இந்த புலம்பெயர் தொழிலாளர் முகாமில் சாப்பிடுவது நாட்டு மக்களிடையே கண்ணீரை வரச் செய்துள்ளது.

Advertisement