’பூமியின் தந்தை’ பிர்சா முண்டா யாரென தெரியுமா?

636

’’உங்களின் கலாச்சாரங்களையும், மத நம்பிக்கையையும் என்றும் மறக்காதீர். நிலம் மீதான உரிமையை என்றும் விட்டு கொடுக்காதீர்’’ என்று மக்களிடம் வலியுறுத்தியவர்.

இந்தியா சுதந்திரம் பெறாமல் இருந்த போது, ஆங்கிலேயரிடமிருந்தும், நிலவுடமையாளர்களிடமும் அடிமையாக்கபட்டு அவர்களின் கீழே வேலை செய்து வந்த பழங்குடி மக்களின் உரிமையை மீட்பதற்கு போரடியவர் தான் இந்த பிர்சா முண்டா. பூமியின் தந்தை என்று பழங்குடி மக்களால் அழைக்கப்பட்ட பிர்சா முண்டாவை பற்றி பார்ப்போம்

சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மார் தட்டி சொல்லி கொண்ட காலம் முதல் இன்று வரை பொருளாதார பிரிவினை என்பது வளர்ந்து கொண்டே உள்ளது. அவற்றிலிருந்து சுதந்திரம் இன்றும் கிடைக்கவில்லை.

நமக்கு சுதந்திரம் என்றாலே, காந்தியும், சுபாஷ் சந்திர போசும், பகத் சிங் ம் தான் நினைவிற்கு வருவர். ஆனால் இவர்கள் வருவதற்கு முன்பே 19 வயது ஆன ஒருவர் ஆங்கிலேயரை நடுங்க வைத்துள்ளார். அவர் தான் உரிமை மீட்பு போராளி பிர்சா முண்டா.

இவர் 1875ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி இராஞ்சி மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் வாழ்நாளில் படிப்பு என்பது முக்கிய அங்கம் வகித்தது. சிறிது காலம் மிஷனரிப் பள்ளியில் படித்தார். பின் தன் ஆசிரியரின் வழிகாட்டுதலால் ஜெர்மன் மிஷன் பள்ளியில் படித்தார்.

’சர்தார்’ கலவரத்தின் போது பிரிட்டிஷார்கள் எப்படியெல்லம் பழங்குடியினரை அடக்கியாண்டார்கள் என தெரிந்து கொண்டார். முன்னதாக தனது ஆசிரியரின் வார்த்தைகளை கேட்டு கிருத்துவ மதத்தில் மாறிய இவர் கிருத்துவ மதத்தில் உள்ள முரண்களை தெரிந்து கொண்டு தன் பிறப்பின் மதமான பழங்குடி மதத்திற்கே மீண்டும் வந்தடைந்தார்.

பின் அவர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடினார். பின் தன் மக்களின் உழைப்பை சுரண்டும் நிலவுடையவர்களை எண்ணி கொதித்தெழுந்தார். இந்த சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் `உல்குலான்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். தன் 19 வயதிலே தன் நில மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டார். இந்த போராட்டம்  நில உரிமைகளை முதன்மையாக கொண்டதாக அமைந்தது. பிரிட்டிஷார்கள் மற்றும்  ஜமீன்தார்கள் ஆகியவர்களை வெளியேற்றுவதும் இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

பழங்குடியினர்கள் இவரது தலைமையில் கொரில்லா முறையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸார்களைக் கொன்றனர். பின் 1894 ல் காட்டுவரியை ரத்துசெய்ய பிர்சா தலைமையில்  போராட்டம் நடத்தினார். பின்னாளில் இவரின் போரட்டத்தின் சாரம் புரிந்து மற்ற நில பழங்குடியினர் இனத்தவர்களும் இவருடன் இணைந்துகொண்டனர்.இவரின் போராட்டம் பிரிட்டிஷாரை கொதித்தெழ வைத்தது. இதனால் பிர்சா இரண்டு வருடம் சிறைவைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்து ஓயாமல் தீவிரமாகப் போராடினார்.

வெளியே உள்ள அழுக்கை சுத்தபடுத்துவதை காட்டிலும் நமக்குள் இருக்கும் குறைகளை சீர் செய்ய வேண்டும் என்று எண்ணி தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்காகவும், பலி கொடுப்பது, குடிப்பழக்கத்திற்கு எதிராகவும் போராடினார் பிர்சா. அதேநேரத்தில் தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். நிலம் மீதான உரிமையை கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார்.

1900-ம் ஆண்டில் பிர்சா ஆதரவாளர்கள் மீது பிரிட்டிஷார்கள் பலரை பிரிட்டிஷார் சரமாரியாக சுட்டு நூற்றுக்கணக்கானோரைக் கொலைசெய்தனர். பின் சில மாதம் கழித்து கெரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது கைதான பிர்சாவை பல சித்ரவதைகளை அளித்தனர். தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டாதான். பார்லிமென்ட்டில் இருக்கும் ஒரே ஒரு பழங்குடி ஆளுமையின் ஓவியம் இவருடையதுதான்.

அவரின் கனவு இன்றும் நிறைவேறாமல் உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும். இன்றைக்கும் நம் நாட்டில் பழங்குடிகளின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தைப் போலவே இன்றைக்கும் நில உரிமை மறுக்கப்பட்டு, பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.
மற்றொரு புறம் தொழிற்சாலைகள், மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் பெருமளவு பழங்குடிகளை அப்புறப்படுத்தி வருகிறது.