காங்கிரஸ் – பாஜகவிற்கு தமிழகத்தில் வாக்கு வங்கியே இல்லை – டிடிவி கடும் சாடல்

449

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

ஒசூர் காமராஜ் காலனியில் சனிக்கிழமை அக் கட்சியின் சார்பில் ஒசூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வா.புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பேசிய அவர் :
தமிழகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் அம்மா வழியில் ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தமிழகத்தில் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலம் இல்லை.

அதனால் காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்துக்கு சாதகமாகவும், பாலாறு பிரச்னையில் ஆந்திரத்துக்கு சாதகமாகவும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளத்துக்கு சாதகமாவும் தேசிய கட்சிகள் செயல்படுகின்றன.

அவர்களுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாததால், மற்ற மாநிலங்களில் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்கள் பெறலாம் என அண்டை மாநிலங்களுக்கு சாதகமாக தேசிய கட்சிகள் செயல்படுகின்றனர்.

தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, நாம்தான் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றுவோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, சூளகிரியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கணேசகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of