பிரியங்கவுக்கு பதிலாக மம்தாவின் முகம்! வரம்பு மீறிய பாஜக நிர்வாகி கைது!

594

அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடையும், தலைமுடியும் நெட்டிசன்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியான பிரியங்கா சர்மா என்பவர், பிரியங்கா சோப்ராவின் அந்த புகைப்படத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் விபாஸ் ஹஸ்ரா போலீசில் புகார் அளித்தார். விபாஸ் ஹஸ்ரா தனது புகாரில்,’ பிரியங்கா சர்மாவின் செயல், சமூக நல்லிணக்கத்தை கெடுத்து, வன்முறைக்கு அடிகோலிவிடும்.

முதல்வர் மம்தா பானர்ஜியை அவமானப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், மேற்கு வங்க கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார். இது சைபர் குற்றமாக கருதலாம்,’ என்று தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார்,’ பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மாவை கைது செய்து ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.