“ஒரே இடத்தில் சிக்கன்,பால்,முட்டை விற்கக்கூடாது..” – காரணம் சொன்ன பாஜக MLA

698

ஒரே இடத்தில் பால், சிக்கன், முட்டை ஆகியவற்றை விற்கக் கூடாது என பாஜக எம்எல்ஏ வினோதமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிக்கன், பால், முட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் விற்கும் முறையை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்ற ஒரு கடை போபாலில் திறக்கப்பட்டுள்ளது.

நல்ல தரமான முட்டைகளையும் பாலையும் மக்கள் இங்கு வாங்கி கொள்ளலாம். அத்துடன் கடக்நாத் சிக்கனையும் இங்குள்ள கோழி பண்ணையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என கால்நடை துறை அமைச்சர் லகான் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஹூசூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராமேஸ்வர் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சிக்கன், முட்டை ஆகிய இறைச்சி வகைகளுடன் தூய்மையான பசும்பால் விற்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இது மத ரீதியிலான உணர்வுகளை பாதிக்கிறது. எனவே இது குறித்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசை கேட்டு கொள்கிறோம். பால் ஒரு இடத்தில் விற்கப்பட்டால், சிக்கன் கடைகள் வேறொரு இடத்தில் வைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.