காங்கிரஸுக்கு தாவிய பாஜக எம்.பி – ராகுல் முன்னிலையில் இணைந்தார்

615

வடமேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்காததால், பாஜக மீது அதிருப்தியில் இருந்த எம்.பி. உதித் ராஜ் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தற்போது வடமேற்கு டெல்லி தொகுதியின் எம்பியாக இருப்பவர் உதித் ராஜ். டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் 6 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் கடந்த திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்டனர். ஆனால், வடமேற்குத் தொகுதி வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது,

இதனால் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த உதித் ராஜ் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார்.

அதில் மீண்டும் நான் என் தொகுதியில் இருந்து போட்டியிடுவேன் நம்புகிறேன். பாஜகவில் இருந்து மீண்டும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜகவில் இருந்து நான் விலக பாஜகவே வழிவகுக்காது என்று நம்புகிறேன் என கூறியிருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு வீண் போனது.

வடமேற்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக பிரபல சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

இதனால் உதித் ராஜ் ஆத்திரமடைந்தார். பின்னர் அளித்த பேட்டியில், வடமேற்கு டெல்லியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புப் தருவதாகக் கூறி, நம்பவைத்து பாரதிய ஜனதா தன்னை ஏமாற்றி விட்டதாக சாடினார்.

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பலருடன் பேசிய போது கூட, எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

ஆனால் தலித் மக்களின் குரலாக ஒலிக்கும் தலித் தலைவர் ஒருவர் போட்டியிடுவதை பாஜக விரும்பவில்லை.

மாறாக, தங்களது கைப்பொம்மையான தலித் வேட்பாளர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவே பாஜக தலைமை விரும்புவது இதன் மூலம் தெளிவாகிவிட்டது என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் உதித் ராஜ். இச்சந்திப்பின் முடிவில் எம்பி உதித்ராஜ் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of