பாஜக வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை… – மீண்டும் குண்டை போடும் முன்னாள் பாஜக பிரமுகர்

664

காங்கிரஸ் கட்சியின் பிரதான பிரச்சாரகரும், பாஜகவிலிருந்து வெளியேறி பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருபவருமான நவ்ஜோத் சிங் சித்து,  தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அதில் நாட்டில் தற்போது மோடியின் எதேச்சதிகாரம் நடந்து வருகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. மோடி ஆட்சி தோல்வியடைந்த ஆட்சி என்று கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

‘ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்’

நாங்கள் அரசியல் சாசனச் சட்டத்தைக் காக்க போராடி வருகிறோம். இந்திய ஜனநாயகத்தைக் காக்கப் போராடி வருகிறோம். மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி, ஆனால் இங்கு மத்தியில் பெரிய கார்ப்பரேட்களின் ஆட்சிதான் நடக்கிறது.

நாட்டில் ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ் கட்சிதான் ஒரே வழி. சிபிஐ, ஆர்பிஐ, நீதித்துறை ஆகியவற்றை காக்க வேண்டும்.

பாஜக இவற்றை சீரழித்து விட்டது. இன்று யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் தேச விரோதிகள் முத்திரை குத்தப்படுகிறது. தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச வருவாய் திட்டம் வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஏழைகளுக்கு உணவு, இளையோருக்கு வேலை வாய்ப்பு என்பதுதான் எங்கள் கவனம்.

‘பாஜக-வின் 5 ஆண்டுகாலம் ஒரு பேரழிவு’

பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சி ஒரு பேரழிவு. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரலாற்று முடிவுகள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட பாஜக இன்று ஏன் அதன் தலைவர்கள் அதை வைத்து ஓட்டு கேட்பதில்லை.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. என்.எஸ்.எஸ்.ஓ தான் இதைக் கூறுகிறது, ஆனால் இதை பாஜக மறைக்கிறது.

வளர்ச்சி வளர்ச்சி என்று வந்தார் மோடி, யார் இன்று வளர்ந்துள்ளார்கள்? பெரிய கார்ப்பரேட்கள்தான். விவசாயிகள், ஏழைகள் விரக்தியில் உள்ளனர்.

‘கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மேல் கல்லெறிந்தால் என்னாகும்?’

காங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் அதிகரிப்பதாக பாஜக கூறினால் அது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மேல் கல்லெறிவது போல்தான்.

2014-ல் மோடியின் மிகப்பெரிய வாக்கு வங்கி கருப்புப் பணத்தை அயல்நாட்டிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்றார். இன்று நாட்டு மக்களுக்கு பாஜக தெரிவிக்க வேண்டும் எவ்வளவு கருப்புப்பணம் நாட்டுக்குள் திரும்பி வந்தது என்பதை.

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வங்கிக் கடன் மோசடிகளில் ஈடுபட்ட பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலை அனுப்பினாரே.. அவர்கள் பெயரை பாஜக அரசு வெளியிடத் தடையாக இருப்பது எது?

பயங்கரவாதம் பற்றி இவர்கள் பேசக்கூடாது. 2014-18-ல் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மட்டும் 1708 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. உள்நாட்டு பாதுகாப்பில் இந்த அரசு முழு தோல்வியடைந்துள்ளது. புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு இந்த அரசு ஏன் பதிலளிப்பதில்லை..?

250 கிலோ ஆர்டிஎக்ஸ் எங்கிருந்து வந்தது? ராணுவ வீரர்கள் வாகனம் நகர்ந்து கொண்டிருந்த போது குண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கிருந்தனர்? அங்கு நீங்கள் என்ன தடுக்கிறீர்களா அல்லது தயார் படுத்திக் கொண்டிருந்தீர்களா? அல்லது எப்போதும் போல் புலம்பலா, முடிந்த பிறகு சரி செய்வீர்களா?

ஊழல் பற்றி கூற வேண்டுமெனில்… ரஃபேல் ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல்? காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால் 126 ரஃபேல் ஜெட்கள் வந்திருக்கும். ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் தலையீடு இருந்ததால்தான் அனில் அம்பானிக்குச் சாதகமாகியுள்ளது.