பாகிஸ்தானின் பெண்ணிடம், ராணுவ ரகசியங்களை தெரிவித்த பாதுகாப்பு படை வீரர் கைது

1099

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும், அச்சுதானந்த் மிஸ்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர், தன்னை ராணுவ செய்திகள் சேகரிக்கும் நிருபர் என்று அறிமுகம் செய்து கொண்டு பழகி வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததைதொடர்ந்து, ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக அந்த பெண்ணிடம் மிஸ்ரா பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மேலும், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை கொண்டு, வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிஸ்ராவின் இந்த செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் ஏதேனும் செலுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement