என் மூளைய காணோம் – கண்டுபுடிச்சி தாங்க! – புகாரால் அதிர்ந்த காவல் ஆணையர்

448

கோவையில் காவல் ஆணையரிடம் தனது மூளையை காணவில்லை என புகாரளித்த நபரால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒருவர் வந்தார். புகார் மனு தரவேண்டும் என வரவேற்பு பிரிவில் கூறிய அவரிடம் போலீசார் என்ன மனு, எது  தொடர்பாக புகார் தரவேண்டும் என கேட்டனர். அப்போது அவர், ‘‘அது ரொம்ப ரகசியமானது, நான் கமிஷனர் கிட்ட நேரடியாக பேசணும், ’’ எனக்கூறியுள்ளார்.

விவரம் சொன்னால் தான் புகார் தர முடியும் என போலீசார் கேட்ட போது, அதை கேட்காமல் கமிஷனர் அறையை நோக்கி அந்த நபர் வேகமாக சென்றார்.

போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, ‘‘ என் மூளையை காணோம், என்னை ஏமாத்தி என் மூளையை திருடிட்டாங்க, என்னால இப்ப யோசிக்க  முடியலை, என் மூளைய வெச்சி யாரோ என்னமோ பண்றாங்க, ’’ என்றார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு  விசாரித்த போது கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி (55) என்பதும், அவர் மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

தனது மூளையை யாரோ திருடிவிட்டார்கள் என கூறி புகாரளிக்க வந்த மன நோயாளியால் கோவை காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.