கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி – புதுச்சேரி முதல்வர்

408

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் எதிர்ப்பை மீறி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு100 யூனிட் மின்சாரம், குடிநீர் இலவசம், அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் இன்று தொடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.  பட்ஜெட் தாக்கல் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசிடம் இருந்து எந்த ஒரு கோப்பும் வரவில்லை என்று கூறி, கூட்டத்தொடரை கிரண்பேடி புறக்கணித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி அவசர கடிதம் எழுதியும் அவர் கலந்து கொள்ளவில்லை. உச்சக்கட்ட குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகர் சிவகொழுந்து தலைமையில் சட்டப்பேரவைக் கூடியது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கிரண்பேடி சட்டப்பேரவைக்கு வராததால், ஆளுநர் உரையை ஒத்திவைப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து 12 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடியதை அடுத்து நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர், 100 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தினால் இலவசம் என்று அறிவித்தார்.

நம்மாழ்வார் வேளாண் திட்டம் அறிமுகம் செய்து, சிறுதானியம் உள்ளிட்ட இதர பயிர்வகைகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று நாராயணசாமி கூறினார். மேலும் புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

4 கோடி ரூபாய் செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும். அப்துல்கலாம் பெயரில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி வழங்கப்படும்.

ஏனாமில் அப்துல்கலாம் பெயரில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் துவங்கப்படும், வறுமைக் கோட்டிற்கு உள்ள மாணவர்கள் அனைவரும் கல்லூரி கட்டணம் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

போன் செய்தால் வீடுகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும். மாடி தோட்டத்திற்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

ஆளுநர் உரை இல்லாமலும், அவரது அனுமதி இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement