வீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்

467

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஆர்பரித்து வருகிறது. இதனால் வெள்ளலூர் – சிங்காநல்லூர் பகுதிகளை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது.

காலை முதல் தரையை தொட்டபடி தண்ணீர் ஓடிய நிலையில், திடீரென தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதையடுத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலை மூடப்பட்டது. ஆற்றில் வரும் ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலை தடுப்பு சுவரில் மோதி நீரை அடைத்து நின்றதால், பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டன.

மேலும் தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் தரைப்பாலத்தின் அருகே செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டு சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் தொடர்ந்து 56 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மத்திய நீர்வள அதிகாரிகள், நீர்வரத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காவிரி கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை மாவட்டம் வாளையாறு பகுதிகளில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால், நவக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.

தக்காளி, வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.