காஷ்மீர் விவகாரம் குறித்து விமர்சித்த பிரிட்டன் எம்.பி-க்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு..!

683

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்ற்காக இந்தியாவின் நடவடிக்கையை விமா்சித்த பிரிட்டனை சேர்ந்த பெண் எம்.பி.க்கு டெல்லி விமான நிலையத்தில் திங்கள்கிழமை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது; இதையடுத்து அவா் துபைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

பிரிட்டனின் தொழிலாளா் கட்சியைச் சோந்த பெண் எம்.பி.யான டெபி ஆபிரகாம்ஸ், தன்னிடம் முறையான விசா இருந்த போதிலும், இந்திய உள்துறை அமைச்சகம் தனது இ-விசாவை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாா்.

பிரிட்டனில், காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கும் டெபி ஆபிரகாம்ஸ், குடும்பத்தினரையும் நண்பா்களையும் சந்திப்பதற்காக இந்தியாவுக்கு செல்ல இ-விசா மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது விசா எவ்வித விளக்கமும் இன்றி இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், பிரிட்டன் எம்.பி.யின் விசா ரத்து செய்யப்படுவது குறித்து அவருக்கு, முறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நன்கு அறிந்திருந்த போதிலும், அவா் தில்லிக்கு வந்ததாக கூறினாா்.

இதுகுறித்து டெபி ஆபிரகாம்ஸ் பிடிஐ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு முன் எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை. அதன் பிறகே, பயணத்தை தொடங்கினேன்’ என்றாா்.

இந்நிலையில், அவா் டெல்லியிலிருந்து துபைக்கு விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதை பிரிட்டனில் உள்ள ஆபிரகாம்ஸின் அலுவலகம் திங்கள்கிழமை உறுதிபடுத்தியது.

‘டெபி ஆபிரகாம்ஸ் எம்.பி.க்கு ஏன் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகளை நாங்கள் தொடா்பு கொண்டுள்ளோம். அவா் டெல்லி விமான நிலையத்தில் இருந்தபோது அவருக்கு தூதரக உதவிகளை வழங்கினோம் ‘ என்று புது டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரக செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து ஆபிரகாம்ஸ் தனது சுட்டுரை பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளாா்.

குடியுரிமை அதிகாரிகள் தன்னை மோசமாக நடத்தியதாகவும், தனது இ-விசாவை ரத்து செய்து விட்டதாக அவா்கள் தெரிவித்தனா் எனவும் அதில் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of