மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்ன?

608

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மோடி தலைமையிலான அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தேர்தலை சந்தித்தது. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கப்பட்டதையடுத்து, 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.

பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்க நேற்று மாலை அரசு நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இணையமைச்சர் அனுராக்சிங் தாகூரும் அப்போது உடன் இருந்தார்.

அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற அம்சங்கள் அப்படியே இடம் பெறும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மூன்றாயிரம் ஓய்வூதியத் தொகை, போன்ற முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல், 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுவும் இந்த முழு பட்ஜெட்டில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது தவிர முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை செயல்படுத்தவும், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். பாரத் ஆயுஷ்மான் போன்ற பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் புதிய உத்வேகம் கிடைக்கலாம், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement