காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம்

797

துபாய்: நம் நாட்டின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் காந்தியின் புகழை பெருமைப்படுத்தும் விதமாக துபாயின் அமைந்திருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டிடத்தில் இந்திய மூவர்ண கொடி, காந்தியின் உருவம் மற்றும் வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.

காண்போரை மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய-துபாய் தூதர் நவ்தீப் சூரி கூறுகையில், புர்ஜ் கலிஃபாவில் வண்ணவிளக்குகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்திஜியை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. காட்சியமைப்புகள், வாசகங்கள் மற்றும் இசை மிக சிறப்பாக அமைந்துள்ளன. இதை வடிவமைத்த குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறினார்.

Advertisement