‘இடைத்தேர்தலில்’ வெற்றி யாருக்கு?

734

எம்பி தேர்தல்… மெகா கூட்டணி… இதெல்லாம் விடுங்க… நடக்க போகும் இடைத்தேர்தலில் அதிமுக அரசு தப்புமா என்பது தான் சந்தேகம் நிறைந்த கேள்வியாக எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆட்சியிலும் இடைத்தேர்தல் நடப்பது சாதாரணமான ஒன்று தான் ஆனால் தற்போது வரும் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரியதாக
பார்ப்பதற்கு காரணம் என்ன… அதனால் ஆளும்கட்சிக்கு வரும் ஆபத்து தான் என்ன… எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதன்
காரணமும் என்ன… இவ்வாறு பல கேள்விகள் மக்கள் மனதில் தொடர்ந்து எழுந்துக்கொண்டுதான் இருக்கும்.இதற்கெல்லாம் விடை தேடும் முன்னால், தமிழகத்தை பொருத்தவரை மொத்தம் எத்தனை விதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல், தேர்தல் என்பது தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்படுவது, இந்த தேர்தலின் மூலம் தான் ஒரு கட்சி ஆளும் கட்சி என்னும் அந்தஸ்தை பெறுகிறது. அதை மக்கள் தான் தீர்மானிக்கின்றனர்.

அடுத்ததாக, உள்ளாட்சி தேர்தல், இதைத் தான் காந்தி, “இந்தியாவின் ஆன்மாவாக விளங்குவது 60 விழுக்காடு கிராமங்களில் வாழும் மக்களே, உள்ளாட்சித்
தேர்தலின் மூலம் தங்களுக்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு, அடிப்படை அதிகாரங்கள்
வழங்கப்பட்டுள்ளன”, என கூறினார்.

உள்ளாட்சித்தேர்தல் என்பது கிராமத்திற்கு மட்டுமல்லாமல், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றின் நிர்வாக அமைப்பை உருவாக்குவது தான் உள்ளாட்சித்தேர்தல். இது மிகவும் முக்கியமான தேர்தலாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2ஆண்டாக தமிழகத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இடைத்தேர்தல், ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டாலோ அல்லது அவர் ராஜினாமா செய்தாலோ அந்த தொகுதிக்கு மட்டும்
தேர்தல் நடத்தப்படும் அந்த தேர்தலின் பெயர்தான் இடைத்தேர்தல்.

இடைத்தேர்தலானது தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இடைத்தேர்தல் உள்பட
அனைத்து தேர்தல்களுமே அந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பில் நடத்தப்படுகிறது. இவர் மாநிலத்தின் சட்டப்பேரவை மற்றும்
மக்களவை தேர்தல்களை நடத்தும் உரிமை பெற்றவர்.

தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சாதாரண இடைத்தேர்தலா அல்லது ஆட்சியை மாற்றும் சக்தி கொண்டு உள்ளதா என்பது மக்களிடையே எழும் பெரிய குழப்பமாக உள்ளது.ஆம், தமிழகத்தை பொருத்தவரை இந்த அளவிற்கு பெரிய இடைத்தேர்தல் இதுவரைக்கும் நடந்ததில்லை. மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன… அதில் 3
தொகுதிகள் மீது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது. மேலும், அவை தேர்தல் கணக்கில் வராது. ஆக மீதமுள்ள 18
தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

திருவாரூர் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால், கஜா புயலால் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பருவநிலைகளைக்
காரணம் காட்டி தேர்தல் தற்போதைக்கு நடத்த வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியதன்
அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் திருவாரூர் உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

சரி, இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஆளும் கட்சிக்கு என்ன ஆபத்து உள்ளது,
பொதுவாக கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
தற்போது கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் நிலவரத்தை பார்க்கலாம்.1957 – 1962

ஆளுங்கட்சி : காங்கிரஸ்

இடைத்தேர்தல் : 7 தொகுதிகள்
வெற்றி : 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2 தொகுதிகளை சுயேச்சைகள் வென்றனர்.

1962 – 1967

ஆளுங்கட்சி : காங்கிரஸ்
இடைத் தேர்தல் : 4 தொகுதிகள்
வெற்றி : 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி

1967-1971

ஆளுங்கட்சி: திமுக

இடைத் தேர்தல்: 7 தொகுதிகள்
வெற்றி: 4 தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி
மூன்றில் எதிர்க்கட்சிகள் வெற்றி

1971-1977

ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகள்
ஆளுங்கட்சிக்கு ஒரு தொகுதியும் கிட்டவில்லை.
வெற்றி : 2 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் வெற்றி

1977-1980

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 3 தொகுதிகள்
வெற்றி : 3 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி

1980-1984

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகள்
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி
இரண்டில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி

1984-1988

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 4 தொகுதிகள்
வெற்றி : 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி
கூட்டணியான காங்கிரஸ் ஒன்றில் வெற்றி

1989 -1991

ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகள்
வெற்றி : 2 தொகுதிகளில் எதிர்க்கட்சியான அதிமுக வெற்றி

1991 -1996

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 5 தொகுதிகள்
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி

1996 – 2001

ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகள்
வெற்றி : ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 தொகுதிகளில் வெற்றி
தலா ஒன்றில் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

2001 – 2006

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகள்
வெற்றி : 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி

2006 – 2011

ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 11 தொகுதிகள்
வெற்றி : அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கைப்பற்றின.

2011 – 2016

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகள்
வெற்றி : அனைத்து 6 தொகுதிகளிலும் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்றது.

2016 – 2019

ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகள்
வெற்றி : 1 தொகுதியில் ஆளும் அதிமுக வெற்றி
ஒன்றில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

இந்த புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது பொதுவாக ஆளுங்கட்சியே இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த முறை தேர்தலில் வரலாறு படைக்குமா திமுக.., வரலாற்றை காப்பாற்றுமா அதிமுக பொருத்திருந்து பார்ப்போம்…

– கள்ளப்புலி பாபு

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of