CAA-க்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை

121

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சட்டமன்றத்தை முற்றுகையிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. நாளை அறிவிக்கப்பட்டுள்ள முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் கடிதம் கொடுத்த 5 நாட்களுக்குள் போராட்டம் நடத்த முற்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்த நீதிபதிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

அடுத்த மாதம் 11-ஆம் தேதி வரை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்த நீதிபதிகள் அன்றைய தினத்தில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of