CAA-க்கு எதிர்ப்பு : வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக தொடரும் போராட்டம்

475

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

2-வது நாளாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது.

இதுபோன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மதுரையிலும் 2-வது நாளாக விடிய விடிய இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஜின்னா திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று குயுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of