திருமணம் முடிந்த கையோடு ‘ஹெல்மெட்’ அணிய பிரச்சாரம்

308

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, திருமணம் முடிந்த கையோடு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தம்பதியை  பலரும் பாராட்டினர்.

சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் 28 சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சேலம் ஜங்ஷனை சேர்ந்தவர் தனசிரியா 22. இருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சீலநாயக்கன்பட்டி மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் சென்று ‘ஹெல்மெட்’ அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள பெற்றோரின் அனுமதியை மணமக்கள் கோரினர். அவர்கள் முதலில் மறுத்தாலும் தம்பதியின் உறுதியை பார்த்து அனுமதித்தனர்.

இதையடுத்து  காலை 11:00 – 11:25 மணி வரை மணமக்கள் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மண்டபத்தில் இருந்து திருச்சி பிரதான சாலை வழியாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா வரை சென்று மக்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மணமக்கள் அளித்த பேட்டி: வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் நாங்கள் சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க விரும்பினோம். இன்றைய கால கட்டத்தில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது. அதனால் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பிரச்சாரம் செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of