சாதியப் படுகொலைகள் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது – பிரதமர் மோடி தாக்கு

141

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் காந்தியத்திற்கு எதிரானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத்தில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி காந்தி நடைபயணம் சென்றார். அதன் 89-ஆவது நினைவு நாளையொட்டி வலைப்பூவில் பதிவிட்டுள்ள மோடி, காந்திய சிந்தனைக்கு எதிரான கொள்கையே காங்கிரஸின் கலாச்சாரமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

சமத்துவமின்மை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றில் காந்திக்கு நம்பிக்கை கிடையாது எனத் தெரிவித்துள்ள மோடி, ஆனால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த காங்கிரஸ் ஒருபோதும் தயங்கியதில்லை என புகார் கூறியுள்ளார். மிக மோசமான சாதிக் கலவரங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான படுகொலைகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றவையே என பிரதமர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் என்பதும், ஊழல் என்பதும் ஒத்தக் கருத்துடைய சொற்களாகிவிட்டன என்பதை நாடு அறிந்து வருவதாக மோடி கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை, தொலைத்தொடர்புத்துறை உள்பட பலவற்றில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். வாரிசு அரசியலை காந்தி வெறுத்தார் எனக்கூறியுள்ள மோடி, வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை என்பதே காங்கிரஸ் கடைபிடிக்கும் கொள்கை எனத் தெரிவித்துள்ளார்.