தஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை

368

தஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் வயல்கள் வறண்டு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 19ஆம் தேதியே பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால், விநாடிக்கு 2.5 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒருபோக சாகுபடியை தொடங்கினர். இந்நிலையில் முக்கொம்பு மேலணை உடைந்து, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

இதனால் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதற்கு பதிலாக வெறும் 100 முதல் 200 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் வெள்ளப் பெருக்காக காட்சி அளித்த காவிரி மற்றும் வெண்ணாறு தற்போது மீண்டும் வறண்டு காட்சி அளிக்கிறது. இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால், வயல்கள் வறண்டு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே முக்கொம்பு அணை உடைப்பை விரைந்து சரி செய்து, காவிரி மற்றும் வெண்ணாறில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of