குட்கா வழக்கு – 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

806

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கோ குடோன் உரிமையாளர் மாதவராவ், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகள் என 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

பின்னர், ஊழலில் தொடர்புடையதாக கூறி குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை சி.பி.ஐ.நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி, சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத், 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.

Advertisement