குட்கா முறைகேடு தொடர்பாக டி.எஸ்.பி. மன்னர் மன்னனுக்கு CBI சம்மன்

398

குட்கா ஊழல் தொடர்பாக டி.எஸ்.பி. மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், இடைத்தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், DSP மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோருக்கு CBI சம்மன் அனுப்பி உள்ளது. குட்கா ஊழல் குறித்து இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக காவல்துறையிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.