கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தது மத்திய குழு

347

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நேற்றிரவு சென்னை வந்தது.

சென்னை தலைமை செயலகத்திற்கு சென்ற மத்திய குழுவினர், முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். மத்திய குழுவின் பரிந்துரைக்குப் பின்னரே, கஜா புயலுக்கான நிவாரண தொகை அறிவிக்கப்படும்.

கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டுள்ளது. இதில், ஆயிரத்து 500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.