டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் மத்தியஸ்த குழு பேச்சுவார்த்தை..!

322

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பெண்களுடன் உச்ச நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழுவைச் சேர்ந்த சாதனா ராமச்சந்திரன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில்,அசாம், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதியில் மக்களால் போக்குவரத்து பெரும் இடையூறாக இருப்பதாக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”ஒரு சட்டத்தை எதிர்த்து ஷாகின் பாக் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த உரிமை உண்டு.

அதேசமயம் மற்றவர்களின் உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது” என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் பேச்சு நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை பேச்சு நடத்த அமர்த்தியது.

சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே இருவரும் ஷாகின் பாக் போராட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் போராட்டக்காரர்களுக்கு விளக்கி சாதனா ராமச்சந்திரனும், ஹெக்டேவும் கூறினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில் உச்ச நீதிமன்ற மத்தியஸ்த குழுவில் உள்ள சாதனா ராமசந்திரன் இன்று தனியாக ஷாகின் பாக் போராட்டப்பகுதிக்கு வந்தார். அவர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினார். குறிப்பாக ஷாகின் பாக் போராட்டக்காரர்களில் இடம் பெற்றுள்ள பெண்களுடன் அவர் தனியாக பேச்சு நடத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of