“கஜா புயல்” – சேதங்களைப் பார்வையிட மத்தியக்குழு இன்று தமிழகம் வருகை

257

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேதங்களைப் பார்வையிட, மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.

கஜா’ புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு தரப்பில் இருந்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் பெரும்பாலான இடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் உணவு கூட கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, நிவாரண நிதி கோரி மனு அளித்து, ‘புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். அதனை ஏற்று, மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர், டேனியல் ரிச்சர்ட் தலைமையில், 7 பேர் கொண்ட குழு, இன்று மாலை தமிழகம் வருகிறது.

மத்தியக்குழுவினர் நாளை காலை முதல்வரை சந்தித்து பேசவுள்ளனர் அதன்பின், மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு நாளை பிற்பகல் முதல் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கின்றனர்.வருகிற 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் முழுவதுமாக புயல் சேதங்களை பார்வையிடும் பணி நடைபெறுகிறது. 27ம் தேதி குழுவினர் மீண்டும் டெல்லி திரும்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.