ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நீர்வளத்துறை அறிக்கை தாக்கல்

549

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் நீர்வளத்துறை, தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் மாசு பாதிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் என கூற முடியாது என ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது வன்மையான கண்டனத்திற் குரியது என தெரிவித்தார்.

ஏற்கனவே, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி, அப்பகுதியில் மோசமான நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபட்டுள்ளது என ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசுக்கோ, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கோ சம்பந்தமில்லாமல் மத்திய அரசின் நீர்வளத்துறை ஆய்வு நடத்தியதாக கூறுவது ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதை தவிர வேறல்ல என தெரிவித்தார்.

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த ஆய்வறிக்கையினை திரும்ப பெற வேண்டுமென என்றும், தமிழக அரசு மத்திய அரசின் தவறான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

Advertisement