பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் எதிர்கட்சிகள்

641

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்கும் வேலையை, ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு களம் இறங்கியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருடன் இன்று சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இக்கூட்டணி குறித்து மாயாவதி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், முலாயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், இடதுசாரிகள் கட்சி தலைவர்கள் ஆகியோருடனும் சந்திரபாபு விரைவில் பேச்சு நடத்த உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு நாளை சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்து, மெகா கூட்டணி குறித்து முறைப்படி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement