“மாமியார் தொல்லை.. அதான் குழந்தைய தூக்கிட்டேன்..” – 7 மாத குழந்தையை கடத்திய பெண் பரபரப்பு வாக்குமூலம்..!

242

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி 8 மாதக் கைக்குழந்தையைக் கடத்திய பெண் எழும்பூரில் சற்றுமுன் பிடிபட்டார். குழந்தை மீட்கப்பட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ரந்தேஷா போஸ்லே (20). இவர் கணவர் ஜானி போஸ்லே (24), மாமியார் அர்ச்சனா ஆகியோருடன் சென்னை கடற்கரை, கண்ணகி சிலை பின்புறம், கடற்கரை மணல் பகுதிக்கு அருகே வசித்து வருகிறார்.

காந்தி சிலை பின்புறத்தில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் ஜான் என்கிற ஆண் குழந்தை உள்ளது.கடந்த 12-ம் தேதி இரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத சுமார் 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தாய் ரந்தேஷா போஸ்லாவிடம் பேசினார்.

தாங்கள் திரைப்படம் ஒன்று எடுப்பதாகவும், அதற்கு நடிக்க ஆண் குழந்தை ஒன்று தேவைப்படுகிறது. நிறைய பணம் கிடைக்கும் என்று கூறி, குழந்தையுடன் தாயை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பிறகு, அங்கிருந்து குழந்தையுடன் மாயமானார்.

குழந்தை கடத்தப்பட்டது குறித்து பூக்கடை போலீஸில் தாய் ரந்தேஷா போஸ்லே அளித்த புகாரின்பேரில் போலீஸார் சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். அதில் குழந்தையைக் கடத்திய பெண் ஒரு ஆட்டோவில் ஏறி எழும்பூர் பாலம் அருகே இறங்குவதும் அங்கிருந்து நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது.

ஆனாலும், அந்தப் பெண்ணைப் பிடிக்க முடியாதாதால் போலீஸார் குழந்தையைக் கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அதே பெண் குழந்தையுடன் வருவதைக் கண்டுபிடித்தனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து வந்துள்ளார்.

உடனடியாக அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். குழந்தை மீட்கப்பட்டது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் ரேவதி எனவும் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இரண்டாவது குழந்தை வேண்டும் எனத் தொடர்ந்து மாமியார் வற்புறுத்தியதால், குழந்தையைக் கடத்தியாக போலீஸாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement