CAA- வுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி.. சென்னையை திணறடித்த மக்கள் கூட்டம்..!

1135

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக சென்னையில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  டெல்லி ஷாகீன் பாக்கில் ஏறத்தாழ 67 நாட்களை கடந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஷாகீன் பாக்கை போன்று சென்னை ஷாகீன் பாக் என்ற பெயரில் சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய போராட்டத்தில் காவல்துறையினரின் தடியடியால் தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும், தமிழக அரசு இச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, திருச்சி,நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் ஆட்சியர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய இயக்கங்களின் இந்த போராட்டத்தால் சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நேற்று தடை விதித்திருந்தது. இந்த நிலையில், தடையை மீறி நடைபெற்ற  CAA பிரம்மாண்ட பேரணி சென்னை வாலாஜா சாலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு இஸ்லாமிய இயக்கங்கள் தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்ததையடுத்து கூடியிருந்த மக்கள் அமைதியாக கலைந்துசென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of