தங்கையை காதலித்ததால் ஆத்திரம்..! -உயிர் நண்பனை வெறித்தனமாக கொன்ற அண்ணன்

514

சென்னையில் சகோதரியை காதலித்ததால் ஆத்திரமடைந்த அண்ணன், தன்னுடன் படித்துவந்த நண்பனையே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரே கல்லூரியில் படித்துவந்த இரு மாணவர்கள் நண்பர்களாக பழகிவந்த நிலையில், அதில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கல்லூரி வாசலிலேயே நடந்த இந்த படுகொலைக்கு காதல் விவகாரமே காரணம் என கூறப்படுகிறது.

துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை தனியார் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த கெண்டமெலா ஷெவன்குமார், சண்முகம் ஆகிய மாணவர்கள் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்துவந்தனர். ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் நண்பர்களாகவே இருவரும் பழகி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஷெவன்குமார் தனது சகோதரி முறை கொண்ட உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக சண்முகத்திற்கு அரசல்புரசலாக தெரிந்ததால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சகோதரியுடன் காதல் வேண்டாம் !

தனது சகோதரியுடன் செல்போனில் பேச வேண்டாம் என சண்முகம் பல முறை கண்டித்தும் ஷெவன்குமார் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் சக மாணவர்கள் சிலருடன் சென்ற சண்முகம், கல்லூரி வாசலில் ஷெவன்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

யாரும் எதிர்பாராத சமயத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சண்முகம், ஷெவன்குமாரை குத்திக் கொலை செய்துள்ளார். இதனால் கல்லூரி முழுவதும் பரபரப்பான நிலையில், விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.

கொல்லப்பட்ட மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தால் உயிருக்கு உயிராக பழகிவந்த நண்பனின் உயிரையே பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of