ரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..! ஊழலை மறைக்க நிலப்பரிவர்த்தனையா..? 

4219

“கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல” தோண்டத்தோண்ட சென்னை மாநகராட்சியின் 10- வது மண்டல அதிகாரிகள் 130 கோட்டத்திற்குட்பட்ட,நெற்குன்றம் பாதை மற்றும் அழகிரி நகர் முதல் தெரு ஆகிய இரண்டு தெருக்களில் நடந்த திட்டப்பணிகளில் மாத்திரம் கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளனர்..

எப்படி என விரிவாக பார்க்கலாம்…

சென்னை மாநகராட்சியின் தற்போதைய 130 வது கோட்டம், பழைய 117 கோட்டத்தில் உள்ள அழகிரிநகர் முதல் தெருவில், வடபழனி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் 3 நியாய விலைக்கடைகள் 2011-ம் ஆண்டு கட்டப்பட்டது.

மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், அவரது தகப்பனார் பழக்கடை ஜெயராமன் அறக்கட்டளை சார்பில்  ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3 நியாய விலைக்கடைகளை கட்டி 25-02-2011  கோவில் நிர்வாகத்திடம்  அன்று ஒப்படைத்துள்ளார்.

அதற்கான கல்வெட்டு ஆதாரம்:-

ஆனால், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால் கடைகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது..

தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சியமைக்கிறது.

அதையடுத்து,,(23-02-2012) அன்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தன்னுடைய அறக்கட்டளை நிதியில் கட்டி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த நியாய விலைக்கடைகளை அதிமுக அமைச்சர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்..

அதற்கான கல்வெட்டு ஆதாரம்:-

ஆனால், ஏற்கனவே முழுதாக கட்டி ஒப்படைக்கப்பட்ட நியாய விலைக்கடைகளை மீண்டும் கட்டியதாக 7 லட்சத்து 82 ஆயிரம் சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டல அதிகாரிகள் செலவுக்கணக்கு எழுதி மோசடி செய்துள்ளனர்..

இரண்டாவது மோசடி நெற்குன்றம் பாதையில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் சார்ந்தது. சதுரங்க வேட்டை படத்தை போன்றது.. அழகிரிநகரில் உள்ள சர்வே எண்: 60 வடபழனி கோவிலுக்கு சொந்தமான 2000 சதுர அடி நிலம்  அம்மா உணவக பயன்பாட்டிற்காக மாநகராட்சிக்கு 22 நிபந்தனைகளின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் 21-03-2015 வரை குத்தகைக்கு வழங்கப்படுகிறது..

ஆனால் மாநகராட்சி ஆக்ரமிப்பு செய்ததோ நெற்குன்றம் பாதையில் உள்ள கோவிலுக்கு  4880 சதுர அடி நிலம்.. அந்த இடத்தில் தான் கட்டிடத்தை கட்டவேண்டுமென்ற  லோக்கல் அரசியல்வாதியின் உத்தரவின் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தையும் கட்டிவிட்டனர்.

ஆனால்,அதற்கு,வடபழனி கோவில் நிர்வாகத்தில் அப்போது பொறுப்பில் இருந்த அறநிலையத்துறை அதிகாரி வான்மதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..

மேலும் நிலத்தில் போர் போடுவதை தடுத்து  நிறுத்தக்கோரி அறநிலையத்துறை சார்பில் காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.. அதனால் அம்மா உணவகத்திற்கு தினந்தோறும் லாரி மூலமாகவே தண்ணீர் கொண்டுவரப்படுகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்..

அம்மா உணவக கட்டிடம் கட்டத்தொடங்கியதில் இருந்து தரைத்தளம் மட்டும் கட்ட செலவிடப்பட்ட மொத்த தொகை 53 லட்சத்து 35 ஆயிரத்து 13 ரூபாய்….

எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல், அறநிலையத்துறை அனுமதியும் இல்லாமல், அம்மா உணவாக கட்டிடத்தின் மீது 23 லட்சத்து 40 லட்சம் மதிப்பீட்டில் தனியாக பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது..

130 வது கோட்ட அலுவலகம் என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கிறது.. மாநகராட்சி அதிகாரிகளின் தவறால்,,அவர்களாலேயே அந்த கட்டிடத்தில் அலுவலகம் அமைக்க இயலவில்லை..

இன்னும் பழைய பள்ளிக்கட்டிடத்திலேயே தான் கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. பல லட்சக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டுள்ளதென குமுறுகிறார்கள் வடபழனிவாசிகள்… எப்படியாவது கணக்கு காட்ட வேண்டுமென்பதால் அம்மா உணவகத்தின் மேல் உடற்பயிற்சி கூடமாகவாது மாற்றி,பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்..

அழகிரி நகரில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் 23 லட்சத்து 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.. எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் குறைந்த பட்சம் கழிப்பறை வசதி கூட இல்லை..

ஆனால் சார்பதிவாளர் அலுவலகம் என்ற பெயர்ப்பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பயன்பாடும் இல்லாமல் கிடைக்கிறது..

ஆனால், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தில் இரவு நேரத்தில் விபச்சாரம் நடக்கிறது என ஆதங்கப்படும்  அந்தப்பகுதி மக்கள் கட்டிடம் சும்மா கிடந்தா எல்லாம் தான் நடக்கும் இருக்கும் வருத்தம் தெரிவிக்கிறார்கள் ..

சரி விஷயத்திற்கு வருவோம்,

அறநிலையத்துறையின் அனுமதியின்றி சென்னை மாநகராட்சி  ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்டிய முறைகேட்டை மறைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தாராள மனதோடு உதவ முன்வந்துள்ளனர்..

கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க முயற்சிக்காமல், பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை நிலப்பரிவர்த்தனை அடிப்படையில் மாற்றிக்கொள்ள முயற்சி நடக்கிறது என்கிறார்கள் கோவில் விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள்…

மோசடியை மறைப்பதற்காக  அறநிலையத்துறை இடத்தை பரிவர்த்தனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி  மாற்றிக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளதா என அறநிலைத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி கோவிந்தராஜிடம் கேட்டோம்…

ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 34 உபபிரிவு 2 ன் படி 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகை நீட்டிப்பு செய்வதற்கு கூட ஆணையருக்கு மாத்திரமே அனுமதியுண்டு. குத்தகைக்கு வாங்கிய இடத்தில் பழுது பார்ப்பது,புதிதாக கட்டுவது என எதுவாக இருந்தாலும் ஆணையர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.

அவ்வளவு ஏன், யாருக்காவது கோவில் இடத்தை குத்தகைக்கு கொடுப்பது என்றால் அதைக்கூட பொது அறிவிப்பாக வெளியிட  வேண்டுமெனசட்டம் சொல்கிறது. இப்படியிருக்க பரிவர்த்தனை அடிப்படையில் மாற்றிக்கொள்ள முயற்சித்தால் நூறு சதவிகிதம் அது சட்ட விரோதம்.

ஏதோ ஒரு பெரிய முறைகேடு நடந்துள்ளதென அர்த்தம்.அதற்கு அறநிலையத்துறையும் உதவுகிறது என்று தான் சொல்லவேண்டும் என்றார் கோவிந்தராஜ்…

சென்னை மாநகராட்சியின் வடபழனி கோவில் நில ஆக்ரமிப்பு குறித்து  ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமாரிடம் பேசினோம்..

நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை இருக்கிறது சார்.. குறிப்பாக,அழகிரி நகரில் கோவில் நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு, ஆண்டுக்கணக்கில் திறக்கப்படாமல் உள்ள கட்டிடத்தில் சட்டவிரோத காரியங்கள் இரவு நேரத்தில் நடைபெறுகிறது என அந்தப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அனுமதி வாங்கிய இடத்தை விட்டு எப்படி மற்றொரு இடத்தில் கட்டிடம் கட்டினார்கள். முறைகேடாக கட்டப்பட்ட அம்மா உணவகம் மற்றும் பல்நோக்கு கட்டிடத்திற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் இது குறித்து முறையாக விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என தெரிவித்தார்..

இந்த விவகாரம் குறித்து,, அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் IAS உடன் பேசினோம்..

எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாக கேட்டவர்.. சட்டப்படி இந்த விவகாரத்தில், அறநிலையத்துறைக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையில் செயல்பட கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், எந்த தவறுக்கும் இடம் கொடுக்காத வகையில் சட்ட வல்லுனர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனக் கூறி முடித்துக்கொண்டார்..

நயா பைசாவுக்கு கூட சட்டத்தை மதிக்காமல், இஷ்டத்திற்கு கட்டிடத்தை கட்டிவிட்டு, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சிக்கல் என்றவுடன் நிலத்தை பரிவர்த்தனை செய்து கொள்வதை  மோசடி என்று சொல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அதை அழைப்பது என்று தெரியவில்லை.

சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது “வேல்”… என்ற வசனம் பேசி “வெற்றிவேல்-வீரவேல்” முழக்கமிட்டவர்கள் “வேல் பூஜை”  நடத்தியவர்கள், வட பழனி முருகன் கோவில் விவகாரத்தில் வாய் திறப்பார்களா ?

Advertisement