EXCLUSIVE: நட்சத்திர விடுதிகளுக்கு வரிச்சலுகை..! ரூ.100 கோடி வருவாய் இழந்த  சென்னை மாநகராட்சி..! பகீர் ரிப்போர்ட்..!

1880

சென்னை மாநகராட்சிக்கான வருவாயை ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமான துறை வருவாய்துறையாகும். சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919-ன் படி சொத்துவரி, தொழில் வரி, கம்பெனி வரி, விளம்பர வரி, தொழில் உரிமம் என பல வகைகளில் வருவாய்த்துறை அதிகாரிகளால் வரி வசூலிக்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் (2019 -20) முதல் அரையாண்டில் தொழில் வரி மற்றும் சொத்து வரி வசூல், முந்தைய நிதியாண்டின் காலக்கட்டத்தை விட இருமடங்காக உயர்ந்துள்ளது.

அதாவது, நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில், 607.38 கோடி ரூபாய் சொத்து வரியும், 201.59 கோடி ரூபாய் தொழில் வரியும் என மொத்தம் 808.97 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 491.61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ஆனால், சென்னை மாநகராட்சிக்கு இன்னும் கூட 100 கோடி அளவிற்கு கூடுதல் ஆண்டு வருமானம் வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். ஆனால் அந்த பணம் அதிகாரிகளின் வீட்டிற்கு போகிறதென அதிர்ச்சி வெடிகுண்டையும் வீசுகிறார்கள்.

விசாரித்தபோது தான் முழு விபரம் தெரிந்தது.

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, அவற்றின் வகைப்பாடு மற்றும் வசூலிக்கும் வாடகைத் தொகை அடிப்படையில் சொத்துவரி விதிக்கப்படுகிறது.
அதே போல திருமணமண்டபங்களில் நடத்தப்படும் விழாக்கள் 50 என்ற ஒரே மாதிரியான கணக்கினை எடுத்துக்கொண்டு சொத்துவரி விதிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாயை அதிகாரிகள் எப்படி தங்களுக்கு மடைமாற்றிக்கொள்கிறார்கள் என பார்க்கலாம்.

சிறப்புவகை கட்டிடங்களுக்குள் வரும் நட்சத்திர விடுதிகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை பார்க்கலாம்

1. Radha Regent 

8 வது மண்டலம் 105 வது கோட்டத்திற்குட்பட்ட அரும்பாக்கத்தில் இருக்கும் ராதா ரீஜெண்ட் என்ற நட்சத்திர விடுதிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் சீராய்வு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்கான வாடகை குறைந்தபட்சம் 600 அதிகபட்சம் 800 என வசூல் செய்யப்படுவதாக வரி ரசீது தெரிவிக்கிறது.

ஆனால் முந்தய வரி விதிப்பில் குறைந்த பட்சம் அறைக்கான வாடகை 100 ரூபாயும் அதிக பட்சம் 200 மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், மொத்த அறைகள் 28 மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நட்சத்திர விடுதியான ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் 91 அறைகள் இருப்பதாக அதன் இணையப்பக்கம் கூறுகிறது.

2. Radisson Blu

ஆலந்தூரில் இருக்கும் ஜி.ஆர்.டி குழுமத்திற்கு சொந்தமான Radisson Blu ஹோட்டலுக்கு, 57 லட்சத்து 41 ஆயிரமாக இருந்த வரி, சீராய்வு செய்யப்பட்ட பிறகு 19 லட்சத்து 43 ஆயிரமாக குறைந்து விட்டது.

மேலும் 101 அறைகளாக இருந்தது, 75 அறைகளாக குறைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது. மிகக்குறைவான வாடகை வசூலிக்கப்படுவதாக மாநகராட்சியின் வரி ரசீது கூறுகிறது. அதாவது, 37 லட்சத்து 98 ஆயிரத்து 385 ரூபாய் வரி குறைக்கப்பட்டுள்ளது.

3. NOVOTEL 

சோழிங்க நல்லூரில் அமைந்திருக்கும் 5 நட்சத்திர விடுதியான NOVOTEL ஹோட்டலுக்கு ஒரு கோடியே 18 லட்சம் விதிக்கப்பட்டிருந்த நடப்பில் உள்ள அரையாண்டு வரி. சீராய்வு செய்யப்பட்ட பிறகு 41 லட்சத்து 46 ஆயிரமாக குறைந்து விட்டது.

அதாவது 76 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.  எப்படி செய்திருக்கிறார்கள் என்றால், 342 டபுள் ரூம்கள், சிங்கிள், டபுள் என பிரித்து குறைவான வாடகை வசூலிப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

4. Park Plaza

துரைப்பாக்கம், சாலையில் அமைந்துள்ள Park Plaza ஹோட்டலுக்கு நடப்பில் இருந்த அரையாண்டு வரி 44 லட்சத்து 97 ஆயிரம்.

ஆனால் சீராய்வு செய்யப்பட்டபிறகு 14 லட்சத்து 22 ஆயிரமாக குறைந்துள்ளது. எப்படி என்றால் Park Plaza-வில் இருக்கும் 129 அறைகளும் சிங்கிள் ரூம்களாக மாற்றப்பட்டு அறைவாடகை குறைக்கப்பட்டுவிட்டது. அதாவது 30 லட்சத்து 75 ஆயிரத்து 400 ரூபாய் வரி குறைக்கப்பட்டுள்ளது.

5. VIVANTA 

சோழிங்க நல்லூரில் அமைந்திருக்கும் 5 நட்சத்திர விடுதியான VIVANTA ஹோட்டலுக்கு 60 லட்சத்து 80 ஆயிரமாக விதிக்கப்பட்டிருந்த நடப்பில் உள்ள அரையாண்டு வரி.

சீராய்வு செய்யப்பட்ட பிறகு 36 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது 24 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வரி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இதே போல சென்னை மாநகராட்சி வரி ரசீதில் சொல்லப்பட்டிருக்கும் சில ஹோட்டல்களின் அறை வாடகை விபரங்கள்..

ராதா கிருஷ்ணன் சாலையில் இருக்கும் உட் லேண்ட்ஸ் ஹோட்டலில் ரூம் வாடகை 400 ரூபாய்…

அதே சாலையில் இருக்கும் ப்ரசிடின்ட் டவர் ஹோட்டல் ரூம் வாடகை 850 ரூபாய்..

தி.நகர்.ராஜ்பேலஸ் ரூம் வாடகை 750 ருபாய்..

வடபழனி அம்பிகா எம்பயர் ஹோட்டல் வாடகை 1000 ரூபாய்..

ஆலந்தூர் ஹாப்லிஸ் ஹோட்டல் வாடகை 2000 ரூபாய்..

தி.நகரில் இருக்கும் ஜி.ஆர்.டி ஹோட்டலில் 1000 ரூபாய் மாத்திரமே ஒரு நாள் அறைக்கான வாடகை வசூலிக்கப்படுவதாக பொய் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து மாபெரும் மோசடி செய்து சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் செய்திருக்கும் இந்த மோசடியால் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதென மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. முறையான விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சிகள் வெளிவரும் என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.