Toilet முதல் Tax-வரை..! தலைவிரித்தாடும் முறைகேடுகள்..! சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும் சென்னை மாநகராட்சி..!

1761

குண்டு வைப்பது மட்டுமா தீவிரவாதம் ! அரசுக்கு துரோகம் இழப்பது..

திட்டமிட்டே அரசுக்கு பல நூறு கோடி ருபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது கூட தீவிரவாதம் தான். உண்மையில், இந்த கட்டுரைக்கு  இப்படி ஒரு தொடக்கம் அவசியம் என்றே கருதுகிறோம்..

ஒரு செய்தியால் ஊழலை ஒழித்துவிட முடியுமா ? நிச்சயம் முடியாது. ஆனால் கட்டாயம் குறைக்க முடியுமென நம்புகிறோம்.சென்னை மாநகராட்சியில் நடக்கும் கணக்கில்லாத  தகிடு தத்தங்கள் மாநகராட்சி நிர்வாகத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

பெரும்பாலான ஊழியர்கள் நேர்மையானவர்களாக இருந்தாலும் சிலருடைய பேராசையால் கடுமையான நிதிப்பற்றாக்குறையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தடுமாறி வருவதாக தகவல்கள் உலவுகின்றன.

2019-2020 ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் மொத்த பட்ஜெட் 3547 கோடியே 44 லட்ச ரூபாயாகும். இதில் ஊழியர்களுக்கான ஊதியம்,ஓய்வூதியம் ஆகியவற்றின் செலவு  மாத்திரம் 1739 கோடி ரூபாய்.

அதாவது மொத்த பட்ஜெட்டில் சரிபாதி பணம் மாநகராட்சி ஊழியர்களுக்கே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதைத்தவிர நிர்வாக செலவுகளுக்காக 148 கோடி ருபாய் செலவிடப்படுகிறது..

கை நிறைய சம்பளம் வாங்கும் சென்னை மாநகராட்சி நிரந்தர ஊழியர்கள்.. அரசாங்கத்திற்கு உண்மையாக பணியாற்றுகிறார்களா என்றால்..! நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். பொத்தாம் பொதுவாக இப்படி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை அரசு ஊழியர்கள் மீது முன்வைக்கவில்லை.

இதோ அதற்கான ஆதாரங்களை பட்டியலிடுகிறோம்.

சென்னை தீவுத்திடலில் நடக்கும் அரசுப் பொருட்காட்சி அரங்கில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த வசூலிக்கப்படும் கட்டண ரசீதை பாருங்கள். 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது..

ரயில்வே நிலையங்களில் ஏ.சி காத்திருப்பு அறையில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில்  அரும்பாக்கம் பகுதியில் இருக்கும்.

“லீ கிளப்” வளாகத்தில் இருக்கும் 34 அறைகள் கொண்ட விடுதியில் இரண்டு படுக்கை வசதி கொண்ட ஏ.சி அறைக்கு 100 ருபாய் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக,பல ஆண்டுகளாக  பொய் கணக்கு காட்டி அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்..

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெரிய மனது செய்து, 2600 ரூபாய் கட்டணம் வாங்கும் “லீ கிளப்” விடுதியின் அறைகளுக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறதென வரி விதித்துள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம்..

சோழிங்க நல்லூரில் அமைந்திருக்கும் 5 நட்சத்திர விடுதியான NOVOTEL ஹோட்டலுக்கு மாத்திரம்  76 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரி குறைப்பு செய்து தாராளம் காட்டியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

விஜயா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு திருமண மண்டபங்களுக்கும் சேர்த்து,, ஒரு திருமண நிகழ்ச்சி நடத்த 5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,, ஒரு மண்டபத்திற்கு திருமணத்திற்கான கட்டணம் 25 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதென மாநகராட்சி அதிகாரிகள் செய்த மோசடியால் 10 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது….

சென்னை மாநகராட்சியிலேயே ஆகப்பெரிய ஊழல் நடப்பது மழைநீர் வடிகால் துறையோ என நூறு சதவீதம் சந்தேகப்படலாம். ஆம்.. 2016-17 ம் ஆண்டு மண்டலம்-1ல் மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு மாநகராட்சி பணியாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை..

( ஆர்.டி.ஐ ஆதாரம் படம் )

12-வது மண்டலத்தில் வந்திருப்பது பகீர் மோசடி ரகத்தைச்சேர்ந்தது.. ,அதாவது ஆலந்தூர் மண்டலத்தில்  மழைநீர் வடிகால்களை தூர்வாரி வெறும் ஒரு டன் மணல் அள்ளப்பட்டுள்ளது.. ஆனால் அதற்கு செலவிடப்பட்ட தொகை 56 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்..

வெறும் ஒரு டன் மணல் அள்ள 56 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.. யார் கேள்வி கேட்பது ? யாரும் கிடையாது.. எவ்வளவு அடி மட்டத்திற்கும் சென்று மோசடி செய்து,, தங்களை வளமாக்கி மாநகராட்சி நிர்வாகத்தை மொட்டையடிக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்பதையே மழைநீர் வடிகால் துறை வெளிப்படுத்துகிறது..

சுகாதாரத்துறையை எடுத்துக்கொண்டால்,, சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை க்கூட பயனாளிகளுக்கு கொடுக்காமல் ஆட்டையை போடும் சம்பவங்களே நடந்து வருகிறது…

மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் NUHM திட்டத்தின் கீழ் 2019 -ம் ஆண்டு 384 பேர் ANM பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,, அதில் 282 பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

(ஆதாரம் -படம் )

கிட்டத்தட்ட 100 பேர் வேலைக்கே வராமல் சம்பளம் வாங்கியதில் சென்னை மாநகராட்சிக்கு இழப்பு மட்டும் 17 லட்சத்து,76 ஆயிரம் ரூபாய்.. அந்த பணத்தை திருப்பித் தரக்கேட்டு ஒப்பந்த எடுத்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி பணத்தை வசூலித்துள்ளனர் சில நேர்மையான அதிகாரிகள்..

(ஆதாரம் -படம் )

திரும்பும் பக்கமெல்லாம் மோசடியும்,முறைகேடும் நிரம்பி வழியும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறையும் தன் பங்கிற்கு  காவடி தூக்கும் அவலமும் நடக்கிறது..  கேன்சர் நோயின் நான்காம் கட்டத்தில் இருக்கும்  நோயாளியைப்போல மாறிவிட்டதால்,, 2020 புத்தாண்டு தொடக்கத்திலேயே கடன் வாங்கி சம்பளம் போடும் நிலைக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கிறது.

அன்றாட வரிவருவாய் சரிபாதியாக குறைந்துவிட்டதால், 3 மாதங்களுக்கும் மேலாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் மாநகராட்சி நிர்வாகத்தால் கொடுக்க முடியாத நிலை நிலவுகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தோர்.. உண்மையில் சம்பளம் போடக்கூட பணமில்லாமல் தடுமாறுகிறதா சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்பதை அறிந்துகொள்வதற்காக மாநகராட்சி ஆணையர் பிரகாஷை தொடர்புக்கொள்ள முயன்றோம் முடியவில்லை.

அதனால் ஈ.மெயில் மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம்.அதற்கும் பதிலில்லை.மீண்டும் அவரது  அலுவலக உதவியாளரை தொடர்புகொண்டு நியாபகப்படுத்தினோம்.. அதற்கும் பதிலில்லை.. ஒரு வேளை.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியோ என்னவோ….மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு.. அரசின் வரி வருமானத்தில் கை வைக்கறவங்கள வேடிக்கை பார்க்கலாமா ?