காணும் பொங்களில் காணாமல் போன கணவன்கள், மனைவிகளால் மெரினாவில் பரபரப்பு

659

காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சென்னை மெரினாவில் லட்சக் கணக்கானோர் திரண்டனர். இந்த சமயத்தில்தான் உழைப்பாளர் சிலை அருகே இருந்த காவல் உதவி மையத்தில் தொடர்ச்சியாக வந்த சில புகார்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தன.

கணவன்களைக் காணவில்லை என்று மனைவிமார்களும் மனைவிகளைக் காணவில்லை என்று கணவன்மார்களும் தொடர்ந்து புகார் கொடுத்தவண்ணம் இருந்தனர்.

அதாவது 12 பெண்கள் தம்முடைய கணவன்களைக் காணவில்லை என்றும், 9 கணவன்கள் தமது மனைவிகளைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்க போலீசாரே அதிர்ந்தனர்.

பிறகு காணாமல் போன ஒவ்வொருவரின் பெயராக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்தனர் போலீசார்.

அவர்கள் அறிவிக்க அறிவிக்க காணாமல் போன ஒவ்வொருவரும் காவல் உதவி மையம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

ஒருவழியாக காணாமல்போன கணவன்களையும் மனைவிகளையும் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறை அவர்களின் பெயர்களை பதிவு செய்துகொண்டதோடு அறிவுரையும் கூறி அனுப்பினர்.

இதேபோல் காணாமல் போன 11 சிறுவர், சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வருடா வருடம் காணும் பொங்கலால் களைகட்டும் மெரினா கடற்கரை இந்த வருடம் காணாமல் போனவர்களால் பரபரப்பில் மூழ்கியது.