19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

456

வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.