8 வழி சாலை விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

1050

8 வழி சாலைக்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சிலரை பாதுகாக்க முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை – சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த திட்டத்திற்காக தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சக்திவேல், சுந்தரம் ஆகியோரை கைது செய்ய காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒவ்வொரு முறையும், அரசிடமிருந்து வலுக்கட்டாயமாக தகவல்களை பெற வேண்டி உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை பொருத்தவரை அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்கு வருவதை தவிர வேறெதும் செய்வதில்லை எனவும், இந்த வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைத்து விடலாம் எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதில் தமிழக அரசு சிலரை பாதுகாக்க நினைப்பது வருத்தமளிப்பதாக கூறினர்.

அதேபோல, இந்த புகாரில் ஜாமீன் பெற்ற அரசு அதிகாரிகளின் ஜாமீனை நிராகரிக்க கோரிய மனுவை காலம் தாழ்த்தி வரும், மாவட்ட நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of