இப்படியும் மரணம் வருமா?.. இறைச்சி கடைக்காரருக்கு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்..!

1788

திருப்பூரில் இயந்திரம் மூலம் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் மரக்கட்டையை சுத்தம் செய்தபோது கழுத்தில் அணிந்திருந்த பாதுகாப்பு துணியின் நாடா இறுக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டி நாமக்கொல்லை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஏழுமலை (24). திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருப்பூர் தாராபுரம் ரோடு அய்யப்பம்பாளையம் பிரிவு பட்டத்தரசியம்மன் கோவில் அருகில் உள்ள சக்தி சிக்கன் என்ற இறைச்சிக்கடையில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இறைச்சிக்கடையில், இறைச்சி வெட்ட பயன்படும் மரக்கட்டையை இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் அணிந்திருந்த பாதுகாப்பு துணியின் நீளமான நாடா இயந்திரத்தில் சிக்கியது.

அதன் மறுமுனை இவரது கழுத்தில் சுற்றப்பட்டு இருந்தது. இயந்திரத்தின் அழுத்தம் அதிகமானதால், இவரது கழுத்தில் இருந்த நாடா இறுக்கியது. அடுத்த சில நொடிகளில், மூச்சுவிட முடியாமல் கீழே சாய்ந்தார். அருகில் கிடந்த கத்தியை எடுத்து நாடா துணியை அறுக்க முயன்றார்.

ஆனால், கழுத்து பலமாக இறுக்கியதால், அருகில் கிடந்த கத்தியைகூட அவரால் எடுக்க முடியவில்லை. ஒரு சில நொடிகளில் அங்கேயே உயிரிழந்தார். இந்த காட்சி, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதை போட்டுப்பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். இப்படியும் ஒரு சம்பவம் நடக்குமா? என அப்பகுதி மக்கள் வியந்து போனார்கள். இதுகுறித்து, திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of