முதலமைச்சர் பழனிசாமியின் நெடுஞ்சாலை முறைகேடு வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

409
palanisamy

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை முறைகேடு புகாரில் தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து முதலமைச்சர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலை திட்டங்களில் உலக வங்கியின் விதிகளை மீறி முதலமைச்சரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக முதலமைச்சர் மீது 4 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணை என்ன என்றும் ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது முதலமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா என லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக கூற முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.