கும்கியுடன் கும்மாளம் போடும் ‘சின்னதம்பி’

295

தமிழகத்தில் சில நாட்களாக ஒளிக்கப்படும் ஒரே குரல் சின்னதம்பி யானை. இந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தனது குடும்பத்தைத் தேடி வருகிறது.தற்போது, உடுமலைப்பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையுடன், கும்கி யானை கலீமை விளையாட வைத்து வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வனத் துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக கிருஷ்ணாபுரம் அருகே உள்ள குட்டை ஒன்றில் தஞ்சமடைந்த சின்னத்தம்பி யானை, அங்கிருக்கும் கரும்புத் தோட்டங்களில் உள்ள கரும்புகளைத் தின்றபடி அங்கேயே சுற்றி வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை கும்கி யானை கலீமைக் கண்ட சின்னத்தம்பி அதிக பிரியத்துடன் விடிய விடிய அதனுடனே இருந்து வந்தது. கலீம் யானையின் தும்பிக்கையைப் பிடித்து விளையாடிய படி அதே பகுதியில் இருந்து வருகிறது.

இதனிடையே சின்னத்தம்பி யானை அவ்வப்போது தஞ்சமடையும் கழிவு நீர் குட்டையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, அங்கிருந்த முட்புதர்களும் அகற்றப்பட்டன.

இதனால் சின்னத்தம்பி யானை தஞ்சம் அடைவதற்கு புதர்கள் இல்லாத காரணத்தால், கும்கி யானை கலீம் கட்டப்பட்டிருக்கும் இடத்திலேயே சின்னத்தம்பி யானையும் உலவி வருகிறது.

வனத் துறையினர் சின்னத்தம்பி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.