சிங்கப்பெண்ணே பாடல் எத்தனை மணிக்கு வரும்? காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த பதில்

569

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’.

இதில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே பாடல் எப்போது வெளியாகும் என்று படக்குழுவினரை கேட்டு சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்.

உலகளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சிங்கப்பெண்ணே பாடல் இரவு 10 மணியளவில் படக்குழுவினர் வெளியிட்டனர். பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

சிங்கப்பெண்ணே பாடல் பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் இனமே பெண்களை வணங்கும். பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கும். உலகத்தில் இருக்கும் எல்லாம் வலிகளும் பெண்களின் பிரசவ வலிக்கு முன் சாதாரணம்.

அன்னை, தங்கை, மனைவி என்று பன்முகம் கொண்ட பெண் எதற்கும் பயப்படக்கூடாது. பெண்கள் சாதாரணமானவர்கள் இல்லை. பல திறமைகள் கொண்ட அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து துணிந்து செல்ல வேண்டும் என்று பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.

விவேக் இந்த வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. ‘எழு எழு எழு…’ என்று ரகுமான் பாடும் போது நமக்குள் ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. பெண்களுக்கான கீதமாக இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் எழுச்சி பாடலாக அமைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த பாடலை படக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.