கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறை – வாகனத்திற்கு தீ வைப்பு

406

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்குவங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மே 19ம் தேதி இறுதிகட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதற்கு கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென வன்முறை ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டபோது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

கொல்கத்தா விவேகனந்தா கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையில் இருந்த வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் இருந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சந்திர வித்யாசகர் சிலை உடைக்கப்பட்டது.

வன்முறை எப்படி தூண்டப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. சில வீடியோக்களில் காவி உடை அணிந்தவர்கள் மற்றொரு பிரிவினர் மீது கற்களை வீசுவதுபோல் உள்ளது.

வன்முறைக்கு நீங்கள்தான் காரணம் என்று பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னதாக, ஜாதவ்பூர் தொகுதியில் நேற்று அமித்ஷா பங்கேற்கவிருந்த பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மம்தா பானர்ஜி அரசால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க கூட அனுமதி அளிக்கப்படவில்லை. கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Advertisement