கொரோனா நிலவரம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்த முதல்வர்

260

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கொரோனா நிலவரம் குறித்தும், சாத்தான்குளம் சம்பவம் குறித்தும் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் 996 உயிரிழப்புகள் சென்னையில் ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகவும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.