இ-பாஸ் நடைமுறையில் எளிமை – முதல்வர் பேச்சால் மக்கள் ஆறுதல்

777

ஊரடங்கால் விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் 2,800 பயனாளிகளுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற 32.30 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது என்றும் விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகளை அரசு கட்டி வருவதாக கூறினார். மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.

Advertisement