“காய்கறி வெட்டினேன்.. கணவன் இறந்துட்டார்..” போலீசிற்கே ‘அல்வா’ கொடுத்த பெண்..!

20838

கோவை மாவட்டம் வெரைட்டி ஹால் அருகே உள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ. 40 வயதாகும் இவர், கரோலின் என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் பிரிட்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் மார்பு பகுதியில் கத்தி பதிந்ததாக மனைவி கரோலின் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

ஆனால், மனைவியின் பேச்சில் இருந்த தடுமாற்றத்தை அறிந்த போலீசார், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதன்பிறகு, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, குடும்பத்தேவைக்காக பிரிட்டோ மனைவியின் தாலியை அடகு வைத்துள்ளார்.

இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கரோலின் தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின் நாடகமாடியுள்ளார். இதனையடுத்து, கரோலினை காவல் துறையினர் கைது செய்தனர்.